Mar 22, 2009

அருந்ததி - திரை விமர்சனம்

ஆக்ரோஷம் மாறாமல் தெலுங்கிலிருந்து வந்திருக்கும் படம்.
கண் இமைத்துக் கொண்டிருந்தால்,மனம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.அதனால்தான் ஒன்றில் மனம் லயித்துப் போய் நின்று விட்டால் அதனைக் கண் கொட்டாமல் பார்க்கிறோம் என்று ஓஷோ ஓரிடத்தில் சொன்னது நேற்று 'அருந்ததி' படம் பார்க்கும்போது நடந்தது.

கதை : கந்தர்வகோட்டை ராஜ குடும்பத்து பெண் அருந்ததி. சிறு வயதிலேயே வாள் சண்டை நடன கலையில் தேறுகிறாள். அவள் அக்காவை மணக்கும் பசுபதி சமஸ்தான சொத்தை அபகரிக்க முயல்கிறான். பெண்களை கடத்தி கற்பையும் சூறையாடுகிறான். அவன் கொடுமை தாங்காமல் அக்கா தூக்கில் தொங்கி இறக்கிறாள்.

ஆவேசமாகும் அருந்ததி பொது மக்கள் கையாலேயே அடித்து பசுபதியை சாகடிக்க உத்தரவிடுகிறாள். செத்து விட்டதாக அவனை காட்டுக்குள் போடுகின்றனர். அகோரர்கள் அவனை காப்பாற்றி விடுகின்றனர். அவர்களிடம் கடும் பயிற்சி எடுத்து அமானுஷ்யசக்தி கொண்டவனாக மாறுகிறான் பசுபதி.

வெறியோடு கந்தர்வ கோட்டை சமஸ்தானத்தில் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் அழிக்கிறான். அருந்ததியை கெடுக்க முயல்கிறான். எதிரிகளை வீழ்த்தும் நடன கலையால் அவனுடன் மோதி வீழ்த்துகிறாள். உயிரோடு அவனை சமாதியாக்குகிறாள். ஆனாலும் அவன் தீய சக்தி ஊரெங்கும் நோயை பரப்புகிறது. மறு பிறவி எடுத்து வந்து பசுபதியை அருந்ததி அழிப்பது கிளைமாக்ஸ்.
  • சமாதியிலிருந்து வெளியில் வரும் ஆவி செய்யும் அட்டகாசங்கள் திகில். குடும்பத்தினரை அழிக்க துடிக்கும் ஆவியிடம், 'அவர்களை ஒன்றும் செய்யாதே' என்று அப்பாவியாக அழும் அனுஷ்கா உருக வைக்கிறார். நடையிலும் பார்வையிலும் கம்பீரம் காட்டும் இளவயது அருந்ததி நடிப்பில் மிரட்டுகிறார். பல இடங்களில் இவரது கண்கள் அழகால் நடித்துள்ளன.
  • பேய் விரட்டும் முஸ்லிம் பெரியவராக வேகம் கூட்டுகிறார்- சாயாஜிஷிண்டே.
  • ஆவியாக வரும் சோனு -வின் 'மிரட்டல்' நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
  • கையகல குங்கும பொட்டுடன் நிறைகிறார் மனோரமா.
  • குட்டியின் பின்னணி இசை, ஸ்பெஷல் எபெக்ட், கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு பலம் சேர்கின்றன.
  • ஆவியின் அலறலும், அனுஷ்காவின் அலறலும் காது ஜவ்வை ஜல்லடையாக்குகிறது.
  • ரத்த வெள்ளத்தில் துடிக்கும் நடன ஆசிரியையை, 'சோனு' மானபங்கம் செய்வதை ஜீரணிக்க முடியவில்லை.
  • தற்சமயம் ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் ஆவிகளைப் பற்றிய 'யாவரும் நலம்' படமே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்போது'அருந்ததீ' யாவரும்நலத்துடன் இணைந்திருக்கிறது.
  • பெண்களுக்கு முக்கியத்துவம் தந்து படமெடுத்த கோடி ராமகிருணனை மனதார பாராட்டலாம்.
அருந்ததி-ஹாலிவுட் திரைப்படத் தொழில் நுட்பங்களை எல்லாம் மென்று தின்று ஜீரணித்து விட்டு,விஸ்வரூபமாய் எழுந்து நிற்கும் தெலுங்குவுட் மாயாஜாலம். ஒரு இரண்டு மணி நேரப் புது ஜென்மம் எடுக்க விரும்புபவர்கள் பார்க்க வேண்டிய படம்.

இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments: