Apr 15, 2013

'இனி எனக்கு சுதந்திரம்' நடிகை அஞ்சலி பேட்டி

நடிகை அஞ்சலி கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். சித்தி பாரதி தேவியும், சினிமா டைரக்டர் களஞ்சியமும் தன்னை கொடுமைபடுத்தியதாக குற்றச்சாட்டுகளையும் வெளியிட்டார். இதையடுத்து திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.


அஞ்சலியை யாரோ கடத்தி சென்று தனக்கு எதிராக தூண்டிவிடுவதாக சித்தி பாரதிதேவி போலீசில் புகார் அளித்தார். சென்னை ஐகோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனுவும் தாக்கல் செய்தார். தங்கையை கண்டுபிடித்து தருமாறு அஞ்சலியின் அண்ணனும் ஐதராபாத் போலீசில் புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து போலீசார் அஞ்சலியை தேட துவங்கினர். இந்த நிலையில் திடீரென்று ஐதராபாத் போலீஸ் துணை கமிஷனரிடம் அஞ்சலி ஆஜரானார். தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் மனஉளைச்சலில் இருந்ததால் ஓய்வெடுக்க மும்பை சென்று இருந்தேன் என்றும் வாக்குமூலம் அளித்தார்.

2 மணி நேரம் போலீஸ் விசாரணையில் பங்கேற்று விட்டு புறப்பட்டுச் சென்றார். அஞ்சலி இன்று தான் பேசிய வீடியோ காட்சி தொகுப்பு ஒன்றை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

என் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. இதில் இருந்து மீண்டு இப்போது வெளியே வந்து விட்டேன். என் சொந்த வாழ்க்கை சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் இனிமேல் நான்தான் எடுப்பேன். என் முழு கவனமும் இனி சினிமாவில்தான் இருக்கும்.

ஏற்கனவே ரவிதேஜாவுடன் ‘பலுபு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வந்தேன். அந்த படத்தில் நான் நடிக்க வேண்டிய காட்சிகள் கொஞ்சம் பாக்கி உள்ளது. அவற்றை முடித்து கொடுப்பேன்.

இந்தியில் தயாரான போல்பச்சன் படம் தெலுங்கில் எடுக்கப்படுகிறது. அந்த படத்திலும் நடிக்கிறேன். எனது நடவடிக்கைகளால் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டன. இதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இக்கட்டான சூழலில் பத்திரிகைகள், டி.வி.க்கள் மற்றும் ரசிகர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அஞ்சலி கூறினார்.


களஞ்சியம் ஜோடியாக ‘ஊர்சுற்றி புராணம்’ என்ற படத்தில் அஞ்சலி 10 நாட்கள் நடித்துள்ளார். அதில் இன்னும் நடிக்க வேண்டி உள்ளது. அப்படம் பற்றி எதுவும் அவர் கூறாததால் அதில் நடிப்பாரா என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டு உள்ளது.

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இனிமேல் சென்னைக்கு வரமாட்டேன் என்று ஏற்கனவே அவர் கூறி உள்ளார். ‘ ஊர் சுற்றி புராணம்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 24-ந் தேதி துவங்குகிறது. அன்று அஞ்சலி வராவிட்டால் அவர் மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்ய களஞ்சியம் முடிவு செய்துள்ளார். ‘போல்பச்சன்’ தெலுங்கு படப்பிடிப்பு மராட்டிய மாநிலம் புனேயில் இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக அஞ்சலி புனே சென்றுள்ளார்.

Source : http://video.maalaimalar.com/
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...