Apr 29, 2009

அப்துல் கலாமும் 'ஹூவர்' பதக்கமும்


முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம், அமெரிக்காவின் மிக உயரிய விருதான ஹூவர் பதக்கத்தைப் பெற்றார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 2008ம் ஆண்டிற்கான, அமெரிக்காவின் ஹூவர் பதக்கத்தைப் பெற்றார். இப்பதக்கம் இதற்கு முன் அமெரிக்க முன்னாள் அதிபர் மூன்று பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது நீண்ட காலம் மக்களுக்குச் சேவை ஆற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்பதக்கத்தை, "அமெரிக்காவின் சொசைட்டி ஆப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ்' என்ற அமைப்பு ஆண்டு தோறும் வழங்குகிறது.

இவ்விழா, நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆசியாவிலேயே இப்பதக்கத்தைப் பெறும் முதல் நபர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இப்பதக்கத்தை வழங்கி தன்னைக் கவுரவித்ததற்காக, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து அப்துல் கலாம் கூறியதாவது:
நமது வாழ்க்கை முறையில், தகவல் தொடர்பு, மருத்துவம், கல்வி வழங்குதல், நீதி மற்றும் மனித மேம்பாடு போன்றவற்றில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நூற்றாண்டில் இந்தியா அபார வளர்ச்சி கண்டிருக்கிறது. மக்களின் முன்னேற்றத்திற்கு நாடுகள் பாடுபட்டாலும், வளர்ச்சிக்கு, பயங்கரவாதம் போன்றவை முட்டுக் கட்டையாய் உள்ளன. 2008ம் ஆண்டிற்கான, ஹூவர் மெடலைப் பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பதக்கத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக, ஹூவர் மெடல் போர்டின் தேர்வுக் குழுவினருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நான் ஹூவரைப் பற்றி நினைவு கூரும் போது, ஒவ்வொரு சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்னைக்கும் ஒரு தொழில்நுட்பத் தீர்வு இருக்கும் என்ற, "திறமை இயக்கத்தின்' மீது அவர் கொண்ட நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். சுற்றுப்புறம், அவமதிப்பு, நோய் போன்றவை ஒருபுறம் என்றால் பயங்கரவாதம் மற்றொரு புறம் என்ற ரீதியில் மனிதன் அனைத்துப் பகுதியிலிருந்தும் போராட்டத்தை எதிர் கொள்கிறான். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள், இன்றைய 21ம் நூற்றாண்டின் நவீனப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.

நாட்டில் உள்ள சாதாரண மக்களுக்கு சுகாதார சேவை ஏற்கத்தக்க அளவுக்குக் கிடைப்பதற்கு உரிய முயற்சிகளை கலாம் மேற்கொண்டார் என்றும், கிராமப்புற பகுதிகளுக்கும் தரமான சேவை கிடைக்கக்கூடிய வகையில் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும் கலாம் சிறப்பான சேவையாற்றினார் என்றும் விருது வழங்கும் குழு அறிவித்துள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளை டெலிமெடிசன் மூலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு வழிவகை செய்தார்.

இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments: