Feb 12, 2009

இளமை நீடிக்க ஏழு பயிற்சி

இளமை நீடிக்க ஏழு விதிகள் உள்ளன.

விதி 1 : உடல் நலனுக்குச் சரியான உணவும் போதுமான அளவு தண்ணீரும் தேவை. புரதம், மாவுச் சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, போதுமான நீர், வைட்டமின்கள், தாது உப்புக்குள் அடங்கிய சரிவிகித உணவுத் திட்டத்தை தயாரித்துப் பின்பற்ற வேண்டும்.

விதி 2 : நீங்கள் வாழும் இடங்களில் சூரிய வெளிச்சமும் சுத்தமான காற்றும் நன்கு கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளவும். உடலில் கழிவு சேராமல் பார்த்துக் கொள்ளவும். இரண்டு முறை ‘வெளியே’ போவது மிக நல்லது.

விதி 3 : அதிக உஷ்ணத்தாலும் அதிகமான குளிர்ச்சியாலும் உடல் பாதிக்கப்பட்டால் பாதுகாக்க வேண்டும். சூடுபடுத்தப்படாத இயல்பான நீரிலேயே குளிக்க வேண்டும். உணவு உண்ட பிறகு குளித்தால் ஜீரணக்கோளாறு உண்டாகலாம். உணவு சாப்பிட்டு மூன்று மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். மாலையில் குளிப்பது நல்லது.

விதி 4 : முறையான உடல் பயிற்சியோ அல்லது துரித நடைப்பயிற்சியோ தினமும் தேவை. இத்துடன் போதிய அளவு ஓய்வும் தாம்பத்திய வாழ்வும் தேவை. யோகாசனம், நாடி சக்தி, பிராணயமும் (மூச்சுப் பயிற்சி) அவசியம் தேவை. சூழ்நிலை இடம் தந்தால் பகலில் அரைமணி தூங்கலாம். சராசரியாக தூக்க நேரம் குறைந்தால் உடலும் மனமும் பாதிக்கப்படும். இரவு அதிக நேரம் விழித்திருந்து வேலை பார்ப்பது உடல் நலனை மட்டுமல்ல, மனதையும் பாதிக்கும்.

விதி 5 : உடலுக்குக் கெடுதல் செய்யும் மது, புகை, புகையிலை போன்ற பழக்கங்கள் கூடா. இவற்றால் உடலுக்கு நச்சுத் தன்மை அதிகமாகி உயிரணுக்கள் செயலிழக்க ஆரம்பிக்கின்றன. முதுமைத் தோற்றமும் விரைந்து ஏற்படும். மனக்கவலையைப் போலவே உடலுக்கு கிழட்டுத் தோற்றத்தை இவை தருகின்றன.

விதி 6 : உடல் பருமன் அடைய விடக்கூடாது. மாவுப் பொருள்களை அதிகம் சேர்த்தாலும் உடல் பருமன் அதிகரிக்கும். உடல் பருமன்தான் இதய நோய், மூட்டு வலி உட்பட பல நோய்களின் தந்தை. எனவே, உடல் பருமனாக ஆரம்பிக்கும் போது உணவில் கட்டுப்பாடு, உடற்பயிற்சியில் அக்கறை முதலியன தொடர வேண்டும். முப்பது வயதுக்குப் பிறகு புரத உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் உடல் கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் இரும்புச் சத்து, பி மற்றும் சி வகை வைட்டமின் மாத்திரைகளையும் சத்துணவுக் குறைபாட்டைச் சரி செய்யத் தினமும் சாப்பிட டாக்டரிடம் ஆலோசனைகளைப் பெறவும்.

விதி 7 : மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாவும் வைத்துக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்கும், இளமை மாறாத தோற்றத்திற்கும் அவசியம்.

ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் உங்களின் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெற்றிகளை நினைத்துப் பார்ப்பதாலும் இளமைக்காலத் தோற்றத்தை மனக்காட்சிகளாக பார்ப்பதாலும், இளமை மாறாத தோற்றம் அமையும். சிறு வயதில் பள்ளி சென்ற அனுபவங்கள் அடிக்கடி மலரும் நினைவுகளாக உங்கள் மனதில் படமாகத் தெரிந்தால் உயிரணுக்கள் செயல் இழக்காமல் புதுப்பிக்கப்படும்.

மேலும் பிரார்த்தனை, தியானம், தொழுகை, புத்தகம் படித்தல், இசை கேட்டல், கடமையை முழு ஈடுபாட்டுடன் செய்தல் முதலியனவும் மனதுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கவல்லவை.

எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வும், நம்மிடம் கற்பனை வளமும் உள்ளன என்ற நம்பிக்கை வேண்டும். இந்த நம்பிக்கையாலும் உடல் நலன் பாதுகாப்பாக இருந்தும் நமது இளமைத் தோற்றத்தை நீடித்துத் தரும்.

நன்றி - கே.எஸ்.சுப்ரமணியன்

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments: